மத்தியில் 2024-ம் ஆண்டு மாற்று அரசை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம் - அகிலேஷ் யாதவ் தகவல்

2024-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசை அமைப்பதற்கான முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மத்தியில் 2024-ம் ஆண்டு மாற்று அரசை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம் - அகிலேஷ் யாதவ் தகவல்
Published on

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'வருகிற 2024-ம் ஆண்டில் மத்தியில் மாற்று அரசை அமைப்பதற்கான தொடர் நடவடிக்கை தொடங்கியுள்ளது. நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பேத்கரால் அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலைவாசி உச்சத்தில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாற்று அரசு அவசியமாக உள்ளது.

ஏமாற்றப்படும் உத்தரபிரதேச மக்கள்

உத்தரபிரதேச மாநில மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வளமை, மேம்பாட்டின் பாதையில் இம்மாநிலம் சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எந்த நிலையில் உள்ளது?

மாநிலத்தில் 5 ஆண்டுகால ஆட்சியைக் கடந்தபிறகுதான் முதலீட்டாளர்களை பா.ஜ.க. அழைக்க வேண்டுமா? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?' என்று அவர் கூறினார்.

டிம்பிள் யாதவ் எம்.பி.யாக பதவியேற்பு

இதற்கிடையில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மக்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

அவரது மாமனாரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மரணத்தால் காலியான மெய்ன்புரி தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வென்றார்.

இந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்ற டிம்பிள் யாதவ், பின்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், மக்களவை முன்வரிசைத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

டிம்பிள் யாதவின் கணவரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து மனைவி பதவி ஏற்பதை பார்த்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com