எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி கவலைப்படவில்லை -சந்திரபாபு நாயுடு

தெலுங்குதேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும் தோல்விகளில் இருந்து மீண்டு எழுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி கவலைப்படவில்லை -சந்திரபாபு நாயுடு
Published on

புதுடெல்லி,

லோக்சபா தேர்தலில் தெலுங்குதேசம் படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது.

இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக 6 ராஜ்யசபா எம்.பி.க்களில் 4 பேர் தங்களை பாஜகவில் இணைத்து விட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களில் 3 பேர் பாஜக செயல் தலைவர் நட்டாவை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் சென்றிருக்கக் கூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த கட்சித் தாவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் திருப்பங்கள் தொடர்பாக அடுத்தடுத்து ட்வீட் பதிவுகளைப் போட்டு வருகிறார். அப்பதிவுகளில் சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளதாவது:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில்தான் பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆந்திராவின் எதிர்காலத்துக்கும் பல கோடி ஆந்திரா மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு பாஜகவுடன் நட்பு பாராட்டுவது என்பது எனக்கு எளிதானதுதான். ஆனால் நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

மக்களுக்கு எது நல்லதோ அதைமட்டுமே நான் செய்து வருகிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதையே செய்வேன். ஆந்திரா மக்களின் உரிமைகளுக்கு நான் போராடியதன் விளைவாக தெலுங்குதேச எம்.பி.க்கள் கட்சி தாவியுள்ளனர். ஏனெனில் அவர்கள் தங்களது சொந்த பிரச்சினைகளுக்காகத்தான் பாஜகவுக்கு மாறியுள்ளனர்.

இப்படியான பிரச்சினைகள் எனக்கோ, கட்சிக்கோ புதியது அல்ல. தெலுங்குதேசம் கட்சி செத்து போய்விட்டது என பலரும் சொன்னார்கள். தெலுங்குதேசத்தின் அத்தியாயம் முடிந்து விட்டது என்றார்கள். தெலுங்கு தேசத்தை விட்டு அக்கட்சித் தலைவர்கள் ஓடிவிட்டார்கள் என்றார்கள். கட்சி புதைகுழிக்கு போய்விட்டது என்றனர். ஆனால் நாங்கள் மீண்டும் வந்தோம்.

லட்சக்கணக்கான தொண்டர்கள், கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர். வரலாறு மீண்டும் வரும். இதில் கவலைப்பட எதுவுமே இல்லை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com