

புதுடெல்லி,
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், டிஜிட்டல் தளங்களில் வரும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 25 ஓ.டி.டி. மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், ஆபாசமான மற்றும் சட்டவிரோதமான காட்சிகளை ஒளிபரப்பியதாக கூறி, மேலும் 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதன்படி, உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய 5 தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தளங்களில், சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.