

ஜெலட்டின் குச்சிகள்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட மாமில்லபள்ளி கிராமத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் குவாரி ஒன்று உள்ளது. உரிமம் பெற்று இயங்கக்கூடிய இந்த குவாரியில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்கான ஜெலட்டின் குச்சிகள் ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்டன.ஜெலட்டின் குச்சிகளை கையாளுவதற்கான சான்றிதழ் பெற்றவர்கள் மூலம் பட்வெல் என்ற இடத்தில் இருந்து அவை கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் அந்த வாகனத்தில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.
சிதறிக்கிடந்த உடல் பாகங்கள்
அப்போது திடீரென அந்த குச்சிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த இடம் முழுவதுமே குலுங்கியது. அந்த வாகனம் முழுவதும் உருக்குலைந்து அப்பளம் போல நொறுங்கியது. இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த தொழிலாளர்கள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் பலரது உடல்கள் உருத்தெரியாமல் உருக்குலைந்ததுடன், உடல் பாகங்கள் பல மீட்டர் தூரத்துக்கு சிதறியும் கிடந்தன.இந்த பயங்கர வெடி விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் மீட்புப்பணிகளை முடுக்கி விட்டனர். மேலும் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.சுண்ணாம்புக்கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.