பஸ் நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல்

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த பைகளை சோதித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கலாசிபல்யாவில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள பொதுக்கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் சந்தேகத்திற்கு இடமாக வகையில் இரு பைகள் கிடந்தன. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த பைகளை சோதித்தனர். அப்போது, அந்த பைகளில் வெடிபொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும் பஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
2 பைகளிலும் மொத்தம் 6 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, வெடிபொருட்களை பஸ் நிலையத்தில் வைத்து சென்றது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. ஜெலட்டின் வெடிபொருட்கள் கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் ஆகும். பஸ் நிலையத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






