

புதுடெல்லி,
போலி ஆவணங்கள் மூலம் 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்சஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், யோகேஸ் பாலகிருஷ்ணன் உள்பட பலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, நடராஜன் உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டும் 2 ஆண்டு தண்டனையை உறுதிசெய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு, நடராஜன் ரூ.25 லட்சத்தை பிணைத்தொகையாக செலுத்தி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி அவர் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் நடராஜன் இறந்துவிட்டதால் 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டது.
நடராஜன் தரப்பில் கோர்ட்டில் செலுத்திய ஜாமீன் தொகை ரூ.25 லட்சத்தை அவருடைய மனைவி சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் கேட்டால் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது.
நடராஜனின் ஜாமீன் தொகை வைப்பு நிதியாக வங்கியில் வைக்கப்பட்டுள்ளது நாளை (வியாழக்கிழமை) முதிர்வடைகிறது. சசிகலா தரப்பில் இதுவரை இந்த தொகையை கேட்காததால் இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் வக்கீல் ஆனந்த் சத்தியசீலன் ஆஜராகி, சசிகலாவிடம் இருந்து இதுதொடர்பாக கையொப்பம் பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த தொகையை தொடர்ந்து குறுகியகால வைப்பு நிதியில் வைக்குமாறும், மனுவை டிசம்பர் 5-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடுமாறும் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.