

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள் கொண்டு கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று நான் கோவாக்சின் தடுப்பூசி போட்டுகொண்டேன். பாதுகாப்பாக உணர்ந்தேன், பாதுகாப்பாக பயணிக்கும். என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி போடும் புகைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.