கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம்: சுகாதார மந்திரி

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம் என சுகாதார மந்திரி அறிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம்: சுகாதார மந்திரி
Published on

பெங்களூரு,

சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கொரோனா பெருந்தொற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதன் முடிவில், மாநிலத்தில் மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்க அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.

புது வருடத்திற்கான கொண்டாட்டங்களின்போது, பப்கள், உணவு விடுதிகள் மற்றும் பார்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. புது வருட கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு வரும்.

யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வளவே என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, கர்நாடகாவில் விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீத பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

போதிய படுக்கைகள், ஆக்சிஜன் வினியோகத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அடுத்த திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் வரும் வரை இந்த நடவடிக்கையானது தொடரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com