பி.எப்-ல் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம்

யு.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள பணம் எடுக்கும் விதிமுறைகளும், வரம்புகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம்
Published on: 

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் (டிசம் பர்) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.1,000

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு, அதற்கான இணையதளத்தில் பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்து பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

எனவே இதை எளிமைப்படுத்தும் வகையில், யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதியை கொண்டுவர வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது இந்த வசதி அடுத்த மாத (டிசம்பர்) இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

செயல்திறன் சோதனை

யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதிக்கான தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட பயனா ளர்களை கொண்டு 2 கட்ட சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனையின்போது 102 வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சுமார் ரூ.5 லட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய தொகைகளுக்கு அடிக்கடி பணம் எடுப்பதால் ஏற்படும் பரிவர்த்தனை சுமையை குறைப்பதற்காக குறைந்தபட்சமாக ரூ.1,000 நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'பீம்' செயலி

'பீம்' செயலி மூலம் இந்த பணப்பரிவர்த்தனை நடைபெறும். இதற்காக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒப்புதலை பெறுவதற்கும், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கும் ஆகும் காலதாமதம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு.பி.ஐ. வசதி அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள பணம் எடுக்கும் விதிமுறைகளும், வரம்புகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

X