

திரிபுரா,
திரிபுரா மாநிலம், தலாய் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் ராய். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆர்த்தி ராய். இவர்களுக்கு விஷால் ராய் என்ற மகன் உள்ளார்.
விஷால் ராய் மாணிக்பந்தரில் உள்ள அரிச்சந்திரா உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். சிறந்த மாணவாரான விஷால் அதிக மதிப்பெண் எடுப்பார் என்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தேர்வு முடிவோ அதற்கு எதிராக வந்தது. விஷால் கணிதத்தில் 27 மதிப்பெண் பெற்று மொத்தம் 295 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். விஷால் கணிதத்தேர்வு நன்றாக எழுதியதில் உறுதியாக இருந்தார்.
இதனால் அவரது தந்தை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதன் முடிவு இப்போது வெளியாகி உள்ளது. அதில் விஷால் கணிதத்தில் 71 மதிப்பெண் பெற்றதுடன் அவருடைய மொத்த மதிப்பெண்கள் 339 ஆக உயர்ந்தது. இதனால் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தின் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் நடைமுறை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.