போலி செய்தி எதிரொலி; பார்வையற்ற முஸ்லிம் நபரின் குடும்பம் மீது வன்முறை வெறியாட்டம்

மத்திய பிரதேசத்தில் போலி செய்தி எதிரொலியாக பார்வையற்ற முஸ்லிம் நபரின் குடும்பம் மீது வன்முறை கும்பல் கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளது.
போலி செய்தி எதிரொலி; பார்வையற்ற முஸ்லிம் நபரின் குடும்பம் மீது வன்முறை வெறியாட்டம்
Published on

கார்கோன்,

மத்திய பிரதேசத்தில் ராமநவமியை முன்னிட்டு நடந்த கொண்டாட்டங்களின்போது கார்கோன் பகுதியில் சில கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதில், பலரது வீடுகள் சூறையாடப்பட்டன.

இந்த நிலையில், முன்னணி செய்தி நிறுவனத்தின் சமூக ஊடக செயலியில் வெளியான செய்தியில், கலகக்காரர்கள் கார்கோன் நகரின் புறநகர் பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் இதனை கையிலெடுத்தது. கார்கோனில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குக்டல் கிராமம் உள்ளது. இந்துக்கள் அதிகம் வசிக்க கூடிய இந்த கிராமத்தில், தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அப்துல் ஹமீது என்ற கண்பார்வையற்ற நபர் வசித்து வருகிறார். 4 முஸ்லிம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

அப்துல் ஹமீது கூறும்போது, திடீரென சிலர் எங்களது வீட்டுக்குள் புகுந்தனர். கலகக்காரர்களுக்கு நாங்கள் தஞ்சமளித்து உள்ளோம் என்று கூறினர். வீட்டில் யாரும் இல்லை. ஆனால், கிராமவாசிகள் அதனை கேட்கவேயில்லை.

எங்களுடைய வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். எங்களையும் அடித்தனர். நிதிநெருக்கடியால், கண்பார்வையற்ற சூழலில் எனது மனைவியின் வீட்டில் நான் வசித்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்பின்பு போலீசார் வந்த பின்னரே அப்துலின் குடும்பம் காப்பாற்றப்பட்டு உள்ளது. அவரது வீடு முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. அப்துல், அவரது மகன் மற்றும் உறவினர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளனர்.

இந்த வழக்கில் 15 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனினும், இந்த வழக்கில் ஹமீது அளித்த புகாரின் பேரில் பதிவான எப்.ஐ.ஆர்.ரில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பல்வந்த் ராஜ்புத் என்பவர் கைது செய்யப்படாமல் உள்ளார்.

முஸ்லிம் நபரின் வீட்டில் வன்முறையாளர்கள் தஞ்சம் என்ற செய்தி எப்படி தெரிந்தது என்பது பற்றி பல்வந்த் கூறும்போது, எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். அவர்களுடைய பெயரெல்லாம் எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.

அவருடன் துணைக்கு இருந்த மற்றொரு நபர், வீட்டில் நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. ஆனால், முஸ்லிம் நபரின் வீட்டில் இருந்து அவர்கள் தப்பியோடியிருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பல்வந்த், எங்களுடைய கிராமத்திற்கு வணிகம் எதுவும் செய்ய முஸ்லிம்கள் யாரேனும் வந்தால் அல்லது ஏதேனும் செய்ய கிராமத்திற்கு வந்தால், இது இந்துக்களின் பகுதி. நாங்கள் அவர்களை அடிப்போம் என வன்முறையை தூண்டும்படி பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com