

மும்பை,
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பொய் செய்தியை வெளியிடும் செய்தியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் பொய் செய்திகள் எவை குறிப்பிடப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அமைச்சகத்தின் அறிவிப்பிற்கு காங்கிரஸ் மற்றும் செய்தியாளர்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்வினை கிளம்பியது. இதனையடுத்து இன்று பிரதமர் அலுவலகம், செய்தி அறிக்கையை திரும்ப பெறுமாறு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது என மத்திய அரசு நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை அடுத்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் 'பொய் செய்தி' தொடர்பான உத்தரவை திரும்பப்பெற்றது ஜனநாயகம், மீடியாவிற்கு கிடைத்த வெற்றியாகும் என காங்கிரஸ் கூறி உள்ளது.
மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசுகையில், மத்திய அரசு 24 மணி நேரங்களில் தன்னுடைய அறிவிப்பை திரும்ப பெற்று உள்ளது. இது ஜனநாயகம் மற்றும் மீடியாக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த நகர்வுக்கு ஒற்றுமையாக எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்களுக்கு பாராட்டை தெரிவிக்கிறேன், என்றார். மத்திய அரசின் நகர்வானது மீடியாவிற்கு கட்டுப்பாட்டை கொண்டுவரும் நடவடிக்கையாகும் எனவும் விமர்சனம் செய்தார். மராத்தி மொழியில் டுவிட் செய்த விகே பாட்டீல், பொய் செய்தி என்ற பெயரில் மீடியாக்களின் தன்னாட்சி மீது கட்டுப்பாடுகளை விதிக்கவே அரசு முயற்சித்தது, என குற்றம் சாட்டிஉள்ளார்.