8-வது பாலியல் சுரண்டல் வழக்கில் போலி சாமியார் அசோக் காரத்துக்கு மே 12 வரை சிறை

பெண்களை பாலியல் சுரண்டல் செய்த 8-வது வழக்கு ஒன்றின் விசாரணை நாசிக் மாவட்ட கோர்ட்டில் இன்று நடந்தது.
8-வது பாலியல் சுரண்டல் வழக்கில் போலி சாமியார் அசோக் காரத்துக்கு மே 12 வரை சிறை
Published on

நாசிக்

மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (வயது 67) தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர் உயிரிழந்து விடுவர் என மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.

இது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தெய்வீக சக்தி தனக்கு இருக்கிறது என்றும் சூனியம் வைத்து விடுவேன் என்றும் பெண்களை மிரட்டி வந்திருக்கிறார்.

இதில், பெண்களை பாலியல் சுரண்டல் செய்த 8-வது வழக்கு ஒன்றின் விசாரணை நாசிக் மாவட்ட கோர்ட்டில் இன்று நடந்தது. அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்த மனுவை நிராகரித்த நீதிபதி அவரை மே 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அவரை 9-வது வழக்கு ஒன்றில் சிறப்பு புலனாய்வு குழு நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும். அப்போது அவரை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரும் என கூறப்படுகிறது.

3 ஆண்டுகளாக பெண் ஒருவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் கடந்த மார்ச் 18-ல் முதன்முறையாக போலீசார் அவரை கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் தகாத உறவில் இருக்கும் பாலியல் வீடியோக்கள் வைரலாக பரவின.

அவருக்கு அரசியல் பலம், பண பலம் உள்ளது என கூறப்படுகிறது. இதில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவருடைய சீடர்களாக உள்ளனர்.

சமீபத்தில் இவருடைய நெருங்கிய உதவியாளர் ஜிதேந்திர ஷெல்கே (வயது 50). ஷெல்கேவின் மனைவி அனுராதா (வயது 45) மற்றும் அவர்களுடைய மகன் சுஜித் (வயது 14) ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஷெல்கே, அவருடைய மனைவி உயிரிழந்தனர்.

அசோக் காரத்தின் தொழில் கூட்டாளியாகவும், காரத் அமைத்த ஷிவானிகா அறக்கட்டளையின் துணை தலைவராகவும் ஷெல்கே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடைய மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் சதி செயல் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவார், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர்களில் ஒருவரான சுஷ்மா அந்தாரேவும், சமூக ஆர்வலர் அஞ்சலி ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com