

காலிஸ்தான் ஆதரவாளர்கள்
விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து ஆத்திரத்தை தூண்டும்படி டுவிட்டர் சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை பாதுகாப்பு அமைப்புகள் கண்டுபிடித்து, மத்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளன.
காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்பவர்களின் அனுதாபிகள், பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் கணக்குகள் என பாதுகாப்பு அமைப்புகள் அத்தகைய கணக்குகளை வகைப்படுத்தி உள்ளன.
முடக்க வேண்டும்
இந்தநிலையில், இத்தகைய 1,178 கணக்குகளை டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த கணக்குகள் பொய்ச்செய்தியை பரப்பி, பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எனவே, அக்கணக்குகளை முடக்குமாறும் டுவிட்டருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை டுவிட்டர் இன்னும் பின்பற்றவில்லை.
டுவிட்டர் பதில்
இதுகுறித்து டுவிட்டர் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
ஒளிவுமறைவற்ற கொள்கையுடன் டுவிட்டர் செயல்படுகிறது. டுவிட்டரில் சட்டவிரோத பதிவு இருப்பதாக முறையான வேண்டுகோள் வந்தால், அதை டுவிட்டர் விதிமுறைகளின்படியும், உள்நாட்டு சட்டப்படியும் பரிசீலிப்போம். டுவிட்டர் விதிமுறைகளை மீறுவதாக இருந்தால், அது உடனே நீக்கப்படும். டுவிட்டர் விதிமுறைகளை மீறாமல், உள்நாட்டு சட்டங்களை மட்டும் மீறுவதாக இருந்தால், அந்த நாட்டில் மட்டும் அதை பார்க்க முடியாதபடி செய்வோம். இருப்பினும், எங்களுக்கு சட்டரீதியான உத்தரவு வந்திருப்பதை சம்பந்தப்பட்ட பயனாளருக்கு தெரிவித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்தேகம்
சமீபத்தில், விவசாயிகள் இனப்படுகொலைக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் வெளியான ஹேஷ்டாக்குகளை நீக்குமாறு டுவிட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், சில மணி நேரங்கள் மட்டுமே முடக்கி விட்டு, பிறகு அதை டுவிட்டர் அனுமதித்து விட்டது.எனவே, முந்தைய உத்தரவையே டுவிட்டர் மதிக்காதநிலையில், தற்போது புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான சர்வதேச பிரபலங்களின் பதிவுகளுக்கு டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி லைக் கொடுத்திருந்தார். அதனால், டுவிட்டரின் நடுநிலை குறித்து மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.