போலி ஆவணம் மூலம் சிம்கார்டு.. அப்பாவி வாலிபரை கொலை வழக்கில் சிக்கவைத்த மர்ம நபர்கள்

அப்பாவி வாலிபரை கொலை வழக்கில் மர்ம நபர்கள் சிக்க வைத்த திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.
போலி ஆவணம் மூலம் சிம்கார்டு.. அப்பாவி வாலிபரை கொலை வழக்கில் சிக்கவைத்த மர்ம நபர்கள்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே வர்த்தூரில் உள்ள சுலிகுண்டே காலனியில் வசித்து வந்தவர் ஹேமந்த்(வயது 23). இவரை கடந்த 2024-ம் ஆண்டு 9 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி, தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் வைத்து கொலை செய்து உடலை வீசி சென்றது.

முதலில் பாகலூர் போலீசார் இந்த கொலை குறித்து விசாரித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு வர்த்தூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர் வர்த்தூர் போலீசார் இந்த கொலை வழக்கை விசாரித்து, கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றினர்.

மேலும் அதில் சிம் கார்டை ஆய்வு செய்தபோது, அது பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா லக்கொண்டனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் புனீத்(35), என்பவரின் முகவரியில் இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசார், புனீத்தை கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புனீத் வர்த்தூர் போலீசில் நேரில் ஆஜராகி தனது ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காட்டினார். மேலும் தனக்கும், இந்த கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், மேலும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போதுதான் புனீத்தின் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்றி போலியாக வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கி குற்றவாளிகள் முத்தநல்லூரில் உள்ள ஒரு கடையில் சிம் கார்டு வாங்கிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

செய்யாத தவறில் சிக்கியுள்ள புனீத், தனது ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தங்களது சுயவிவரங்கள் மற்றும் ஆவணங்களை தெரியாத நபர்களிடம் வழங்கும்போது, உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com