விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்: ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்: ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
Published on

புதுடெல்லி,

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வேண்டும் என்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் கனவு ஆகும்.

இந்த நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று அறிவித்தார்.

பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து 6 கோடியே 11 லட்சம் விவசாயிகளுக்கு அரசு சலுகை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

விவசாயத்துக்கும், அதன் உடன் இணைந்த பிற செயல்பாடுகளுக்கும் 2020-21 நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதில் விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பிரிவுகளில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் பிரிவில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விவசாய துறைக்கு வெளியிட்ட மற்றொரு முக்கிய அறிவிப்பு, 2020-2021 நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

2022-23 ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 2 கோடி டன்களாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

அத்துடன் 2024-2015 ஆண்டுக்குள் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தவும் பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதம மந்திரி குசும் திட்டத்தின் கீழ் 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் (சூரிய மின்சக்தியில் செயல்படும் பம்பு செட்டுகள்) அமைக்க உதவி செய்யப்படும். அத்துடன் இந்த திட்டத்தின்கீழ் 15 லட்சம் விவசாயிகள் தங்களது மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை சூரியசக்தி பம்பு செட்டுகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com