டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 124-வது நாளை எட்டியுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவுக் கழகத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் விவசாயிகள் பலர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 42 இடங்களில் இந்த போராட்டத்தினை விவசாயிகள் முன்னெடுத்திருந்ததாக பாரதிய கிசான் அமைப்பின் செயலாளர் சுகதேவ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com