தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் டிராக்டர்-மாட்டு வண்டிகளில் விவசாயிகள் ஊர்வலம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் மாட்டு வண்டி-டிராக்டர்களில் விவசாயிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மடாதிபதி ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியும் பங்கேற்றார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் டிராக்டர்-மாட்டு வண்டிகளில் விவசாயிகள் ஊர்வலம்
Published on

மண்டியா:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரின் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் மண்டியா டவுனில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 46 நாட்களாக காவிரி நீர் பாதுகாப்பு குழுவினா உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் 47-வது நாளாக நேற்றும் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து நேற்று மண்டியா அருகே சித்தயன கொப்பலு, சுண்டஹள்ளி, கிர்கத்தூர், மோலேகொப்பலு, இந்தவாலு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று மண்டியா டவுனில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் கண்டன ஊர்வலம் நடத்தினர். சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் தங்கள் ஊர்வலத்தை தொடங்கிய அவர்கள், ஜெயசாமராஜேந்திரா உடையார் சர்க்கிள் வழியாக மீண்டும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு வந்தனர்.

மேலும் அவாகள் ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிளில் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளை நிறுத்தி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பஞ்சமசாலி மடாதிபதி ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியும் மாட்டு வண்டி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். பின்னர், விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று அங்கு தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் காவிரி நீர் பாதுகாப்பு குழுவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க கர்நாடக அரசு தவறிவிட்டது. வருகிற 1-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெற்கே காவிரி, வடக்கே கிருஷ்ணா, இவை இரண்டும் கன்னடர்களின் இரு கண்களை போன்றது. காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு அநீதி ஏற்பட்டு வருகிறது. குடிநீருக்கு முன்னுரிமை அளிக்காமல் அண்டை மாநிலத்துக்கு 3-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வேதனை அளிக்கிறது.

கர்நாடகத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் தமிழகம் 3-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் கேட்பது, அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது. மத்திய அரசு கர்நாடகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com