

பெங்களூரு:
ஹாவேரி அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். அப்போது அவரும், மற்றொரு விவசாயியும் சேர்ந்து அந்த சிறுத்தையை கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிறுத்தை தாக்கியது
ஹாவேரி மாவட்டம் ரெட்டிஹள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கதிகெப்பா, விவசாயி. இவருக்கு கிராமத்தின் அருகேயே விவசாய தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதிகெப்பா தோட்டத்தில் உள்ள பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தார். நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை கதிகெப்பாவின் தோட்டத்திற்குள் புகுந்தது. முதலில் நாய் என நினைத்து, அதனை அவர் விரட்டியுள்ளார்.
இந்த நிலையில், திடீரென்று அந்த சிறுத்தை கதிகெப்பா மீது பாய்ந்து தாக்கியது. சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க அவர் கூச்சலிட்டார். அப்போது பக்கத்து தோட்டத்தில் நின்று வேலை செய்த கிருஷ்ணப்பா ஓடிவந்தார். பின்னர் அவர் சிறுத்தையிடம் இருந்து கதிகெப்பாவை காப்பாற்றினார். இதையடுத்து கதிகெப்பாவும், கிருஷ்ணப்பாவும் சேர்ந்து சிறுத்தையை விரட்ட முயன்றனர். அந்த சமயத்தில், கதிகெப்பா சிறுத்தையை தூக்கி வீசி உள்ளார்.
கல்லால் அடித்துக் கொன்றனர்
அப்போது அந்த சிறுத்தை தோட்டத்தில் விழுந்துள்ளது. அந்த சமயத்தில் கிருஷ்ணப்பாவும், கதிகெப்பாவும் சிறுத்தை மீது கற்களை தூக்கி வீசியுள்ளனர். இதில், ஒரு பெரிய கல் சிறுத்தையின் தலையை பலமாக தாக்கி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுத்தை செத்து விட்டது. சிறுத்தை தாக்கியதில் கதிகெப்பா பலத்தகாயம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் கிராமத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணப்பா சரியான நேரத்திற்கு வந்ததால், கதிகெப்பா உயிர் பிழைத்தார். அத்துடன் அவர்கள் 2 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி சிறுத்தையையும் கொன்று இருந்தனர். சிறுத்தையுடன் போராடி உயிரை காப்பாற்றிய கதிகெப்பாவையும், கிருஷ்ணப்பாவையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ரெட்டிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.