விவசாயிகள் போராட்டம்: முக்கிய எல்லைகள் மூடப்பட்டன; டெல்லி வாகன போக்குவரத்து மாற்றம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
விவசாயிகள் போராட்டம்: முக்கிய எல்லைகள் மூடப்பட்டன; டெல்லி வாகன போக்குவரத்து மாற்றம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று 71வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். விவசாயிகளின் பேரணியில் சிலர் போலீசாரின் அனுமதியை மீறி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதனால் 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அதன்பின் மத கொடி ஒன்று செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியை ஒட்டிய சிங்கு, பியாவ் மணியாரி, சபோலி, ஆச்சண்டி ஆகிய எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. லம்பூர், சபியாபாத், சிங்கு ஸ்கூல் மற்றும் பல்லா சுங்க சாவடி எல்லைகள் திறந்து உள்ளன. இதனால் மாற்று வழியில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் இருந்து போக்குவரத்து வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. வெளிவட்ட சாலையை தவிர்க்கவும், ஜி.டி.கே. சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ஆகியவற்றை தவிர்க்கும்படி போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். டெல்லி ரெய்சினா சாலையில் வாகன போக்குவரத்து மூடப்பட்டு உள்ளது.

இதேபோன்று காசிப்பூர் எல்லை மூடப்பட்டு உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலை எண் 24ல் உள்ள நொய்டா உடனான இணைப்பு சாலை, தேசிய நெடுஞ்சாலை எண் 9 ஆகியவற்றின் வாகன போக்குவரத்து வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. முர்கா மண்டி மற்றும் காசிப்பூர், சாலை எண் 46, விகாஸ் மார்க், தேசிய நெடுஞ்சாலை எண் 24ல் வாகன போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதனை முன்னிட்டு பயணிகள் வேறு எல்லை பகுதிகள் வழியே பயணிக்கும்படியும் டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதேபோன்று ஹரேவாலி, மங்கேஷ்பூர், திக்ரி, ஜரோடா மற்றும் தன்சா ஆகிய எல்லைகளும் மூடப்பட்டு உள்ளன என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com