

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் போராட்டம் வீரியமாக நடந்து வருகிறது.
இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. மாதக்கணக்கில் நடந்து வரும் இந்த போராட்டம் உலக அளவில் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
இது ஒருபுறம் இருக்க பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் கடந்த 3-ந்தேதி நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டதும் நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பி இருந்தது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்தநிலையில் வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் எதிர்ப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அந்தவகையில் நேற்றுசெய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் இதுகுறித்து கூறுகையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் இருந்து பல அமைப்புகள் விலகி விட்டன. இன்னும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பை கைவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாயிகளின் இந்த போராட்டம், இடைத்தேர்தல்களில் தாக்கம் ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இடைத்தேர்தல்கள் ஒன்றும் அதிகாரத்துக்கான அரையிறுதி அல்ல. அதுமட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தைக்கும் அரசு தயாராக உள்ளது. எனவே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு போராட்டக்காரர்களின் தோள்களில் உள்ளது என்று தெரிவித்தார்.