ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு

பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு
Published on

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. அங்கு ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ள பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். தற்போது முதல் மந்திரியாக உள்ள உமர் அப்துல்லாவின் தந்தையான பரூக் அப்துல்லா நேற்று ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென பரூக் அப்துல்லாவை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.

இதனை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தள்ளிவிட்டனர். இதனால் நூழிலையில் பரூக் அப்துல்லா உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் திருமண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உடனடியாக அங்கிருந்த மக்கள் பிடித்து தாக்கினர். அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பெயர் கமல் சிங் ஜம்வால் என்பதும், அவர் ஜம்முவின் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எந்த வருத்தமும் இன்றி காணப்பட்ட அந்த நபர், இப்படியான ஒரு தருணத்திற்காக 20 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும் கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்ட பரூக் அப்துல்லாவை அந்த நபர் கைத்துப்பாக்கியுடன் நெருங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி நடைபெற்றதாகவும், கடவுள் கருணையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் துணை முதல் மந்திரி சுரேந்தர் சவுத்ரி கூறியுள்ளார். இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com