பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது

மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது
Published on

மும்பை,

தெலுங்கானா மாநிலம், நிசாம்பாத் மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கால்வாயில் மிதந்த சிறுமி உடலை மீட்டனர். அந்த சிறுமி யார் என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சிறுமியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அவளது குடும்பத்தினரை தேடினா்.

இந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி நாந்தெட் மாவட்டம் கேருர் கிராமத்தை சேர்ந்தவள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியின் தந்தை பாண்டுரங்கிடம் (வயது28) விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் சிறுமி குறித்து முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது பாண்டுரங் பெற்ற மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பாண்டுரங் கேருரில் முடி திருத்தும் தொழிலாளியாக உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் 3 வயதில் மகன் உள்ளார். பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை இருந்தது. மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.

எனவே அவர் இதுகுறித்து அங்கு பஞ்சாயத்து தலைவராக உள்ள நண்பர் கணேஷ் ஷிண்டேவிடம் பேசினார். அப்போது அவர்கள் இரட்டை பிள்ளைகளில் மூத்தவளான பிராச்சியை(6) தத்து கொடுப்பது அல்லது கண்ணுக்கு எட்டாத தொலைவுக்கு சென்று விட்டுவிடுவது என்பது பற்றியெல்லாம் யோசித்தனர். பின்னர் இதில் எதுவும் சரிவராது என்று நினைத்து கொலை செய்ய துணிந்தனர்.

இதன்படி சம்பவத்தன்று பாண்டுரங் மோட்டார் சைக்கிளில் மகள் பிராச்சியை மராட்டிய எல்லையில் உள்ள தெலுங்கானா மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கால்வாய்க்கு அழைத்துச்சென்றார். அவர் அங்கு சிறுமியை கால்வாயில் தள்ளிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். பின்னர், அருகில் உள்ள வயலில் வேலை பார்த்த தொழிலாளர்கள் சிறுமி உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியபோதுதான் பாண்டுரங்கின் குட்டு அம்பலமானது.

இது தொடர்பாக பாண்டுரங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய பாண்டுரங்கின் நண்பரான பஞ்சாயத்து தலைவர் கணேஷ் ஷிண்டேவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com