கோர்ட்டின் வங்கி கணக்கில் இருந்து ரூ.64 லட்சம் திருட்டு; குஜராத்தை சேர்ந்த தந்தை-மகன் கைது

கோர்ட்டின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் நம்பர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஜித் சத்தர் என்பவருக்கு கிடைத்துள்ளது.
காந்திநகர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட கோர்ட்டின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட ஒரு மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் முறையாக ரீசார்ஜ் செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்தது. இவ்வாறு செயலிழந்த மொபைல் நம்பர்கள், சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மூலம் புதிய சிம்கார்டுகளுக்கு ஒதுக்கப்படும்.
அதன்படி இந்தூர் மாவட்ட கோர்ட்டின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் நம்பர், குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியை சேர்ந்த சஜித் சத்தர்(57) என்பவருக்கு கிடைத்துள்ளது. இவரது மகன் சாஹில் ரங்ரெஸ்(26) ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சஜித் சத்தரின் மொபைலுக்கு இந்தூர் மாவட்ட கோர்ட்டின் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக பல்வேறு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதை அவர் தனது மகன் சாஹிலிடம் காட்டியுள்ளார். இதைப் பார்த்த சாஹில், குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கு எண்ணின் விவரங்களை கண்டறிந்தார்.
அப்போது அந்த வங்கி கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட சாஹில், அந்த வங்கி கணக்கி பாஸ்வேர்டை கண்டறிந்தார். பின்னர் ஆன்லைன் மூலம் சாஹிலும், அவரது தந்தை சஜித்தும் கோர்ட்டின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தனர்.
ஆரம்பத்தில் சில ஆயிரங்களை எடுத்து செலவு செய்த அவர்கள், பின்னர் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துள்ளனர். இவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தை வைத்து விலையுயர்ந்த மொபைல் போன்கள், ஒரு சொகுசு கார் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் சென்று வந்துள்ளனர். அதோடு தங்கள் பழைய வீட்டையும் சரிசெய்வதற்கு கோர்ட்டின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தந்தை-மகனின் இந்த திருட்டு வேலை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சஜித் மற்றும் சாஹிலை கைது செய்துள்ளனர்.






