

புதுடெல்லி,
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-
அரசியல் குறித்து எதுவும் பேசக்கூடாது என்று எனக்குக் கடுமையான உத்தரவு வந்துள்ளது. அதை நான் பின்பற்றப் போகிறேன். ஆனால், ஒரு மகனாக, என் தாயைப் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
எனது பெற்றோர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சண்டையிட்டதை ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். அப்போது அப்பா அமரீந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அம்மா மூன்று, நான்கு முறை ஏதோ சொல்ல, அப்பா கோபமடைந்தார். அதுதான் அவர்கள் சண்டையிட்ட ஒரே சம்பவம்.
எனது பெற்றோர் கேம்பிரிட்ஜில் உள்ள 'வார்சிட்டி' உணவகத்தில்தான் சந்தித்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது காதலியுடன் அந்த உணவகத்திற்குச் சென்றேன். அங்கு எனது பெற்றோர் சந்தித்ததை ஊழியரிடம் கூறியபோது, 'ஓ... அந்த இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும்' என்றார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அவர் (சோனியா) என் தந்தைக்குச் சொந்தமானவர்; என் தந்தை அவருக்குச் சொந்தமானவர்; அதன்பிறகு என் தந்தை காணாமல் போனார். தந்தையின் மரணம் என் தாயாரை மாற்றிவிட்டது. உண்மையாகவே, அவரது வாழ்வின் சுடர் அணைந்துவிட்டது.
எனது அம்மாவுக்கு எல்லாமே நினைவில் இருக்கும். ஆனால், அப்பா இறந்தபோது என்ன நடந்தது என்பது மட்டும் அவருக்கு நினைவில் இல்லை. அந்தச் சம்பவங்களை எனது சகோதரியும் அம்மாவும் இணைந்து நினைவுபடுத்திப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். அழகான வாழ்க்கையும் ஆழமான காதலும் ஒரே நாளில் முடிந்துவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.