

புதுடெல்லி,
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 157 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனியார் அல்லது அரசு மரத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் நிறுவப்பட்டு உள்ளன. இதில் அடித்தட்டு மக்களை கொண்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 கட்ட திட்டத்தின்படி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை 157 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 63 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த 157 கல்லூரிகள் மூலம் சுமார் 16 ஆயிரம் இளங்கலை மருத்துவப்படிப்புக்கான இருக்கைகள் கிடைக்கும் எனவும், இதில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கல்லூரிகள் மூலம் 6,500 இருக்கைகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி திட்டத்தில் ரூ.17,691.08 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.