கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது - தேவேகவுடா குற்றச்சாட்டு

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது - தேவேகவுடா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு 12 ஆலோசனைகளை கூறினேன். அதில் சிலவற்றை அமல்படுத்தி வருகிறார்கள். கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக நிர்வகித்தார் என்று பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டினர். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுடன் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய்கள் பரவி வருகின்றன. கிராமங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதியும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கொரோனா பரவலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தலும் ஒரு காரணம். மத்திய அரசு, அந்த தேர்தல்களில் தான் அதிக கவனம் செலுத்தியது. கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி இருந்தால், இவ்வளவு பாதிப்புக்கு ஏற்பட்டு இருக்காது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து, கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com