

புதுடெல்லி,
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் மற்றும் இதர நிபந்தனைகளை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சி, பல் இல்லாத சட்டமாக மாற்றும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், தகவல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையையும், தன்னாட்சியையும் கட்டிக்காப்போம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பரவலான கலந்தாலோசனைக்கு பிறகு, நாடாளுமன்றத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, 60 ஆயிரம் ஆண்களும், பெண்களும் அச்சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.
அதன்மூலம், அனைத்து மட்டங்களிலும் வெளிப்படையான, பொறுப்பான நிர்வாகத்துக்கு வழிவகுத்துள்ளனர். இதனால், ஜனநாயகத்தின் அடித்தளம் பலப்படுத்தப்பட்டது. சமூகத்தின் நலிந்த பிரிவினர் பலன் அடைந்துள்ளனர்.
இத்தகைய தகவல் அறியும் உரிமை சட்டத்தை தொல்லையாக மத்திய அரசு நினைக்கிறது. அதனால், அந்த சட்டத்தை அழிக்க திட்டமிட்டுள்ளது. தகவல் ஆணையத்தின் தன்னாட்சியையும், அந்தஸ்தையும் அழிக்க விரும்புகிறது. மத்திய அரசால் தகவல் அறியும் உரிமை சட்டம், அழிவின் விளிம்பில் இருக்கிறது.
மத்திய அரசு தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, தனது நோக்கத்தை நிறைவேற்றலாம். ஆனால், இந்த முயற்சி, நமது குடிமக்களின் அதிகாரத்தை பறிப்பதாக அமைந்துவிடும். இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.