ஆன்லைன் மோசடியில் ரூ.28 லட்சத்தை இழந்த பெண் வங்கி அதிகாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

தனது உடலை பெற்றோர் ஒரே ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று பூமிகா கூறியிருக்கிறார்.
ஆன்லைன் மோசடியில் ரூ.28 லட்சத்தை இழந்த பெண் வங்கி அதிகாரி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் பூமிகா சோரதியா(வயது 25) என்ற பெண் அதிகாரி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பூமிகா வங்கி வளாகத்திலேயே பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை வங்கி ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூமிகா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, பூமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தனக்கு ரூ.28 லட்சம் கடன் இருப்பதாக பூமிகா கூறியிருந்தார். அந்த பணத்தை தன்னால் திருப்பி செலுத்த முடியாததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தனது மரணத்திற்கு பிறகு தன்னுடைய பி.எப். பணத்தை எடுத்து பெற்றோரிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் தனது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும்போது தனது பெற்றோர் ஒரே ஒரு முறை தன்னை கட்டிப்பிடிக்க வேண்டும் என்றும், இதுவே தனது கடைசி ஆசை என்றும் பூமிகா அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பூமிகா டெலிகிராம் செயலி மூலம் ஒரு ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

பூமிகா டெலிகிராம் செயலியில் ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறும் ஒரு குழுவில் இணைந்துள்ளார். அந்த குழுவில் இருந்த நபர்கள் பூமிகாவிடம் ரூ.500 முதலீடு செய்யுமாறு கூறி, அவர்கள் கூறும் பணிகளை முடித்த பிறகு ரூ.700 சன்மானம் தருவதாக கூறியுள்ளனர். ஆரம்பத்தில் அந்த குழு மூலம் சிறிய அளவில் பூமிகா லாபம் ஈட்டியுள்ளார். ஆனால் அதன் பிறகு அதிக தொகையை முதலீடு செய்ய குழு உறுப்பினர்கள் பூமிகாவை வற்புறுத்தியுள்ளனர்.

அதிக லாபம் கிடைக்கும் என்று நினைத்து பூமிகா கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இவ்வாறு சுமார் ரூ.28 லட்சம் வரை பணம் முதலீடு செய்யப்பட்ட நிலையில், அவர் எதிர்பார்த்தபடி லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பூமிகா, இறுதியில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பூமிகாவின் பெற்றோர் அளித்துள்ள புகாரில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மற்றும் பூமிகா எழுதி வைத்துள்ள கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டெலிகிராம் குழு நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com