சில்லறை தகராறில் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி: பயணி கைது

ஆத்திரமடைந்த மவுனிகா, நடத்துநர் பிரவலிகாவை ஓடும் பேருந்தின் வாசலிலிருந்து திடீரென வெளியே தள்ளியுள்ளார்.
சில்லறை தகராறில் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி: பயணி கைது.
பெண் நடத்துனர் குண்ட்லா பிரவலிகா
Published on: 

ஐதராபாத்,

தெலங்கானாவில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் பயணி ஒருவரால் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டு படுகாயமடைந்த அரசுப் பேருந்து பெண் நடத்துநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சில்லறை தட்டுப்பாடால் வந்த வாக்குவாதம்

தெலங்கானா மாவட்டம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் மணுகூரு பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து, கடந்த மாதம் 25-ம் தேதி பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மவுனிகா என்ற பெண் பயணி தனது மகனுடன் இப்பேருந்தில் ஏறியுள்ளார். மகனுக்கான பயணச்சீட்டிற்கு ரூ.100 நோட்டை அவர் கொடுத்துள்ளார். நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (வயது 24) ரூ.10-க்கான பயணச்சீட்டை வழங்கிவிட்டு, மீதி சில்லறையான ரூ.90-ஐ தன்னிடம் சில்லறை தட்டுப்பாடு இருந்ததால், இறங்கும்போது பெற்றுக்கொள்ளுமாறு சீட்டின் பின்புறம் எழுதித் தந்துள்ளார்.

ஓடும் பேருந்திலிருந்து தள்ளிய கொடூரம்

பயணி மவுனிகா தனக்கு உடனடியாக சில்லறை வேண்டும் என நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மித்தகுடெம் கிராமத்தின் அருகே பேருந்து வந்தபோது இவர்களுக்கிடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மவுனிகா, நடத்துநர் பிரவலிகாவை ஓடும் பேருந்தின் வாசலிலிருந்து திடீரென வெளியே தள்ளியுள்ளார்.

9 நாட்கள் நீடித்த போராட்டம்

பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பிரவலிகாவின் கால்கள் மீது பேருந்தின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் அவரது வலது கால் முற்றிலும் நசுங்கியதுடன், இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவிக்குப் பின் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 9 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த அவர், கடந்த (செவ்வாய்க்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை வழக்காக மாற்றம்

இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட பயணி மவுனிகாவை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நடத்துநர் உயிரிழந்துவிட்டதால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரசு நிதியுதவி -வேலை அறிவிப்பு

இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், உயிரிழந்த பிரவலிகாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, அவரது தாயாருக்கு அரசு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு இந்திரம்மா வீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பிரவலிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரியும் அப்பகுதி பேருந்து ஊழியர்கள் நல்-பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

X