அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய பெண் என்ஜினீயர்

இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்ததும், கண்டக்டரிடம் நிறுத்தும்படி காவ்யா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கைகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் காவ்யா. இவர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர் கைகொண்டனஹள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலெக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லும் பி.எம்.டி.சி.(அரசு) பஸ் வந்தது.
அந்த பஸ்சில் ஏறிய காவ்யா, எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்தார். இந்த பஸ்சை டிரைவர் உசேன் ஓட்டினார். கண்டக்டராக முரளி மோகன் இருந்தார். எலெக்ட்ரானிக் சிட்டியில் தான் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்ததும், கண்டக்டரிடம் நிறுத்தும்படி காவ்யா கூறினார்.
அதன்படி கண்டக்டர் விசில் அடித்தும், டிரைவர் உசேன் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த காவ்யா, டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் காலில் கிடந்த செருப்பை கழற்றி டிரைவர் உசேனை சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து டிரைவர் உசேன், பெல்லந்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரில், 'காவ்யா இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பஸ்சை நிறுத்த முடியவில்லை. அதற்கு அடுத்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தினேன். இதில் கோபம் அடைந்த காவ்யா, என் மீது செருப்பால் தாக்கினார். இதனால் என்னால் பணி செய்ய முடியவில்லை. பயணிகளும் பாதிக்கப்பட்டனர்' என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






