பென்சன் விதிமுறையில் மாற்றம்.. அரசு பெண் ஊழியர்கள் இனி இப்படி செய்யலாம்

பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், பென்சன் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பென்சன் விதிமுறையில் மாற்றம்.. அரசு பெண் ஊழியர்கள் இனி இப்படி செய்யலாம்
Published on

புதுடெல்லி:

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2021-ன் 50-வது விதிமுறைப்படி, ஒரு அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரோ மரணம் அடைந்தால், அவரது வாழ்க்கை துணைக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஒருவேளை அந்த வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டாலோ அல்லது அவரது மரணத்துக்கு பிறகோ அவர்களின் குழந்தைகள், வரிசை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், அரசு பெண் ஊழியர், தனது கணவருக்கு பதிலாக தனது குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த பெண் ஊழியர்கள், தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தையை குடும்ப ஓய்வூதியம் பெற நியமிப்பதற்கு அனுமதிக்கலாமா என்று கேட்டு, பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன. அதன் அடிப்படையில், இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அதன்படி, கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலோ, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந்தாலோ, அத்தகைய பெண் ஊழியர்கள் தங்கள் மரணத்துக்கு பிறகு, கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு தங்கள் துறை தலைவரிடம் எழுத்துபூர்வமாக எழுதி கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com