பெண்கள் அனுமதியை எதிர்த்து பெண் தற்கொலை முயற்சி

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அங்கு பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றார்.
பெண்கள் அனுமதியை எதிர்த்து பெண் தற்கொலை முயற்சி
Published on

கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இருப்பினும், கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு, தீர்ப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறியுள்ளது.

ஆனால், பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரிகளும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடும் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில், தேவஸ்தானம் போர்டு, பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரிகள், இந்து அமைப்புகள் ஆகியோரிடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 22ந்தேதிவரை நடை திறந்து இருக்கும்.

இதையொட்டி, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதே சமயத்தில், அந்த வயது பெண்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை தடுத்து நிறுத்த பெண் போராட்டக்காரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.

பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை கண்டித்து, பம்பை அருகே உள்ள நிலக்கல்லில், ஒரு பெண் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர் பெயர் ரத்னம்மா (வயது 51). அவரது தற்கொலை முயற்சியால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும், பக்கத்து வீட்டு பெண்களும் தலையிட்டு அவரை காப்பாற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com