3 குழந்தைகளுடன் கோட்டையின் மேல் இருந்து குதிப்பு: தேசிய மல்யுத்த வீராங்கனை எடுத்த அதிர்ச்சி முடிவு

தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
3 குழந்தைகளுடன் கோட்டையின் மேல் இருந்து குதிப்பு: தேசிய மல்யுத்த வீராங்கனை எடுத்த அதிர்ச்சி முடிவு
Published on

மும்பை,

தாராசிவ் கோட்டையில் இருந்து 3 பிள்ளைகளுடன் தாய் கீழே குதித்தார். இதில் தாய், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தையின் உயிர் ஊசலாடுகிறது.

கோட்டையின் மிக உயரமான இடம்

மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நல்துர்க் கோட்டை உள்ளது. சுமார் 105 ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ள இந்த பிரமாண்ட கோட்டையில் சுமார் 100 கொத்தளங்கள் உள்ளன.

இந்த கோட்டைக்கு நேற்று முன்தினம் தாராசிவ் வன்தால் பகுதியில் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த அஸ்வினி (வயது 30) தனது பிள்ளைகள் அஜிங்கே (5), இரட்டை குழந்தைகள் வீரா, கிராந்தி ஆகியோருடன் வந்தார். அவர் பிள்ளைகளுடன் கோட்டையின் 80 அடி உயரம் உள்ள உப்பிலி கொத்தளத்துக்கு அழைத்து சென்றார். இது கோட்டையின் மிக உயரமான கொத்தளமாகும்.

தங்களை தாய் கோட்டையின் உரமான பகுதிக்கு அழைத்து வந்ததால் குழந்தைகள் அனைவரும் குதூகலம் அடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சி அடுத்த சில நொடிகளில் மரித்து போனது.

குழந்தைகளுடன் கீழே குதித்தார்

நெஞ்சை கல்லாக்கி கொண்ட அஸ்வினி தனது 3 பிள்ளைகளுடன் கொத்தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அஸ்வினி, மகன் அஜிங்கே சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். வீரா, கிராந்தி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

போலீசார் அவர்களை மீட்டு தாராசிவ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு கிராந்தி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாள். வீராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வினி எதற்காக பிள்ளைகளுடன் கோட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அஸ்வினி பால் மல்யுத்த வட்டாரங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார். அவரை அனைவரும் "மகாராஷ்டிராவின் புலி" என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது விளையாட்டு வாழ்க்கையில், அவர் தேசிய அளவில் ஐந்து தங்கம் மற்றும் ஆறு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரது தற்கொலை மகாராஷ்டிரா மற்றும் விளையாட்டு சமூகத்திடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அஸ்வினி மராட்டிய பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் பணியை ராஜினாமா செய்து உள்ளார். அஸ்வினி தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக அஸ்வினியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார்கள் மற்றும் சம்பவத்திற்கான சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அவரது கணவர், மாமியார், மாமனார் மீது வரதட்சணை மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com