

சிம்லா
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் கடும் தாக்குதல் தொடர்ச்சியாக ஹார்மூஸ் நீரிணை வழியே செல்லும் சரக்கு கப்பல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகளுக்கான கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்நாட்டில் விலைவாசி உயர்வும் கூட சேர்ந்து மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளது.
இந்தநிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான மந்திரி ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் கூறும்போது, மேற்காசிய போரால் உரம் மற்றும் மருந்து துறைகளுடன் தொடர்புடைய உலகளாவிய வினியோக சங்கிலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆனால் இந்தியாவில் விவசாயிகளோ, நுகர்வோர்களோ எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளாதவாறு போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மருந்துகளோ, மருத்துவ உபகரணங்களோ அல்லது உரங்களோ தட்டுப்பாடின்றி கிடைப்பது அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேச நலன்களை பாதுகாப்பதற்காக நம்முடைய வினியோக வளங்களை பன்முகப்படுத்தி இருக்கிறோம்.
இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார். ஹார்மூஸ் நீரிணைக்கு வெளியே உள்ள பிற நாடுகளிடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன்படி இந்தோனேசியா, ரஷியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு புதிதாக டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன என்றார்.