

லக்னோ,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங் களில் தொடங்கிய போராட்டம், பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது.
தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
உத்தரபிரதேசத்தில் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்து வந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. அங்குள்ள படோகி, பரைக், அம்ரோகா, காசியாபாத், வாரணாசி, முசாபர்நகர், மீரட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் கடுமையான போராட்டங்கள் நடந்தன.
இதில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் ரப்பர் குண்டுகள் மூலம் போலீசார் சுட்டனர்.
மாநிலத்தில் நேற்று முன் தினம் நடந்த போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் 6 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பிஜ்னோரில் இருவர், கான்பூர், பைரேசாபாத், மீரட், சம்பல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உயிர் இழந்தனர்.
இந்த வன்முறை சம்பவங்களில் மீரட்டில் மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் வாரணாசியில் வன்முறை கும்பலை போலீசார் விரட்டிச் சென்றபோது, நெரிசலில் சிக்கி 8 வயது சிறுவன் ஒருவன் உயிர் இழந்தான்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.
அங்கு வதந்திகள் பரவாமல் தடுக்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல் அமைதி காக்குமாறு முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
எனினும் நேற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
உத்தரபிரதேசத்தில் போராட் டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 260-க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்து உள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக பல இடங்களில் சோதனை நடத்தி இதுவரை 218 பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
போலீசார் மீது கற்களை வீசியவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பான படங்களை நேற்று வெளியிட்ட போலீசார், அவர்களை பற்றிய விவரங்கள் தெரிந்தால் போலீசுக்கு தெரிவிக்குமாறு அறிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தவில்லை எனவும், அவர்கள்தான் சட்ட விரோத ஆயுதங்கள் மூலம் போலீசாரை தாக்கியதாகவும் உத்தரபிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தலைநகர் பாட்னாவில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் கொடி மற்றும் தடிகளுடன் ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். நவாடாவில் போராட்டக் காரர்கள் தேசிய நெடுஞ் சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டங்களில் ஏராளமான சிறுவர் களும் கலந்து கொண்டனர்.
முசாபர்பூர் உள்பட பல பகுதிகளில் டாக்சி, ஆட்டோ, ரிக்ஷா போன்றவற்றை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிழக்கு சாம்பரன் மாவட்டம் அராரியாவில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை மறியல்கள் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திறந்திருந்த கடைகளை போராட்டக்காரர்கள் மூடும்படி வலியுறுத்தினர். தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.
முழுஅடைப்பு போராட்டம் வன்முறை இன்றி நடந்து முடிந்தது.
வட மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமிலும் மற்றும் மேற்கு வங்காளத்திலும் அமைதி திரும்பியது. அசாமில் அமைதியான முறையில் நேற்று சில இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
வடகிழக்கு மாநிலங்களில் செல்போன் இணைய சேவை, மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவை ஆகியவற்றுக்கு கடந்த 12-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் அமைதி திரும்பியதால் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 5 மணி முதல் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது.