போர் விமானி, ஸ்குவாஷ் வீரர், தங்க பதக்கம் வென்ற பெருமைக்குரிய தீபக் வசந்த் சதே

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் வசந்த் சதே போர் விமானி, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், தங்க பதக்கம் வென்றவர் ஆகிய பெருமைகளை கொண்டவர் ஆவார்.
போர் விமானி, ஸ்குவாஷ் வீரர், தங்க பதக்கம் வென்ற பெருமைக்குரிய தீபக் வசந்த் சதே
Published on

புதுடெல்லி,

கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் விங் கமாண்டரான விமானி தீபக் வசந்த் சதே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இவர்களில் விமானி தீபக் வசந்த் சதே, இந்திய விமான படையின் போர் விமானத்தின் விமானியாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்றவரான தீபக் கடந்த 1981ம் ஆண்டு ஐதராபாத்தில் வாள் மரியாதையுடன் தேர்ச்சி அடைந்த பெருமையை பெற்றவர். ஸ்குவாஷ் விளையாட்டில் சிறந்த வீரராகவும் இருந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் தங்க பதக்கம் பெற்றுள்ள தீபக், போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் திறன் பெற்றவர். ஏர் இந்தியாவுக்காக ஏர்பஸ் 310எஸ் ரக விமானத்தின் விமானியாக பணிபுரிந்துள்ளார். இதன்பின்னரே வர்த்தக விமானியாக ஆகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு விமானியான கேப்டன் அகிலேஷ் குமாருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com