மும்பையில் மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர் கைது

மும்பையில் மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர் கைது
Published on

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து, தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்த நிலையில், பட தயாரிப்பாளர் கமல் கிஷோரை அம்போலி போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com