இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ரத்து செய்ய முடியாது - பல்கலைக்கழக மானியக்குழு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்

பல்கலைக்கழக இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ஆனால் ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ரத்து செய்ய முடியாது - பல்கலைக்கழக மானியக்குழு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து மராட்டிய மாநிலத்தின் யுவ சேனா அமைப்பு மற்றும் சிலரது சார்பில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், இறுதித் தேர்வுகளை ஒத்திவைக்க முடியும். ஆனால் ரத்து செய்ய முடியாது. செப்டம்பர் 30-ந் தேதி என்கிற காலக்கெடுவை வேண்டுமானால் தள்ளி வைப்பது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க முடியும். ஆனால் ரத்து செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேர்வுகளை மாணவர்களால் தவிர்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியதுடன், மாணவர்களின் நலன் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே தீர்மானிக்க முடியும். மாணவர்களால் முடிவு எடுக்க முடியாது என்று கூறினர்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com