இளைஞர்களைப் பற்றி பேசியுள்ள நிதிமந்திரி வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசினார். ஆனால் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள அவர், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி உணவுப் பொருட்களின் விலை 7.7 % வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.

விவசாயிகள் பற்றி பேசிய நிதி மந்திரி விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசப்படவில்லை.

புதிய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி மந்திரி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்த பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2013-14 நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சியை 6.4 % ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5 % ஆகவும் வைத்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி.டி.பி. வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது.

இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி மந்திரி வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 % நகர்புறங்களில் 13.8 % வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8 % வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதிமந்திரி பட்ஜெட் உரையில் கூறவில்லை. கடந்த பத்து வருடங்களாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com