10 பொது துறை வங்கி இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது; நிதி செயலாளர் பேட்டி

பொது துறை வங்கி இணைப்புகளால் அதிக வேலைவாய்ப்புகள் பெருகும் என நிதி செயலாளர் கூறியுள்ளார்.
10 பொது துறை வங்கி இணைப்புகளால் வேலை இழப்பு ஏற்படாது; நிதி செயலாளர் பேட்டி
Published on

புதுடெல்லி,

நாட்டில் 10 பொது துறை வங்கிகளை இணைப்பது என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வங்கி யூனியன் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நிதி செயலாளர் ராஜீவ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பரோடா வங்கிகளுடன் 3 வங்கிகளை இணைத்த எடுத்துக்காட்டுகளை கவனியுங்கள். இதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் மற்ற வங்கிகளை இணைத்தபொழுதும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை என்று எதுவுமில்லை. இது வங்கி ஊழியர்களுக்கு சிறந்த வசதிகளையே வழங்கும்.

அடுத்த 5 வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய வேண்டும். அதனால் நாட்டில் பொது துறை வங்கிகளை இணைப்பது என்பது கட்டாயம். ஒரு தூய்மையான மற்றும் பயனுள்ள வங்கி நடைமுறையை நீங்கள் பெற வேண்டும். கடந்த 2017ம் ஆண்டில் 27 பொது துறை வங்கிகள் இருந்தன. ஆனால் 12 பொது துறை வங்கிகளே இப்பொழுது உள்ளன என கூறியுள்ளார்.

இந்த பொது துறை வங்கி இணைப்புகள் சிறிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பலனையே ஏற்படுத்தும். அவர்களுக்கு பணி இடமாறுதலுக்கான வாய்ப்புகளும் அதிக அளவில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைப்புகளால் வடக்கில் இருந்து தெற்கேயும் மற்றும் பிற வழிகளிலும் ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். எந்தவொரு பிரச்னை என்றாலும் அதற்கு தீர்வு காண அரசாங்கம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com