ஆந்திராவில் மர்ம நோய்க்கான உண்மையான காரணம் பற்றி கண்டறிய முதல் மந்திரி உத்தரவு

ஆந்திர பிரதேசத்தில் மர்ம நோய்க்கு ஒருவர் பலியான நிலையில், நோய்க்கான உண்மையான காரணம் பற்றி கண்டறியுங்கள் என முதல் மந்திரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஆந்திராவில் மர்ம நோய்க்கான உண்மையான காரணம் பற்றி கண்டறிய முதல் மந்திரி உத்தரவு
Published on

ஏலூர்,

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஏலூரில் கடந்த 2 நாட்களுக்கு முன் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்புக்கு ஆளாயினர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 45 பேர். சுமார் 200 பேர் குணமடைந்த பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தகுந்த சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

மங்களகிரியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர்கள் குழு, ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு, முழுமையான பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரித்தது. ஏற்கனவே ரத்த பரிசோதனையும், மூளை சி.டி. ஸ்கேனும் செய்யப்பட்டபோதும் மர்மநோய்க்கான காரணத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிய முடியவில்லை.

ஆரம்பத்தில், மர்மநோய்க்கு குடிநீர் மாசு காரணமாக இருக்குமா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு மாசு ஏதும் ஏற்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்தது. கொசு ஒழிப்புக்காக போடப்பட்ட புகைமூட்டம், இந்த நோய்க்கு காரணமாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கல்சர் டெஸ்ட் முடிவில்தான் மர்மநோய்க்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

இந்த மர்மநோய்க்கு ஆர்கனோகுளோரின் என்ற நச்சுத்தன்மை பொருள் காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 123ல் இருந்து 77 ஆக குறைந்துள்ளது. 20 பேர் இன்று (புதன்கிழமை) காலை குணமடைந்து விடுவர். நோயின் கடுமையும் குறைந்து வருகிறது என மருத்துவர் கூறியுள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்துகள், காரீயம் மற்றும் நிக்கல் போன்ற உலோகங்கள் கலந்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மற்றொரு 40 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) மாலை சரியான காரணம் பற்றி தெரிய வரும் என மருத்துவர் கூறியுள்ளார்.

அதிகாரிகள் கண்காணிப்புடன் இருக்கும்படியும், நோய்க்கான உண்மையான காரணம் பற்றி கண்டறியுங்கள் எனவும் முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார். சாத்தியப்பட்ட அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ளும்படியும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com