மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்; மத்திய அரசு எச்சரிக்கை

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்; மத்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடக்கின்றன.

இருப்பினும் திட்டமிட்டபடி ஏப்ரல் 1ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30ந் தேதி வரை இந்தப் பணி நடக்கும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பின்போது, தவறான தகவல் அளிப்போருக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

இதையொட்டி, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மக்கள் தொகை பதிவேடு புதுப்பித்தல் பணியின்போது யாரேனும் தவறான தகவல்களை அளித்தால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

மக்கள் தொகை பதிவேடு படிவத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்கு எளிதாக்குகிற வகையில், கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் தொகை பதிவேடு படிவம் 21 கேள்விகளை கொண்டுள்ளது. இதை பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப 17 அல்லது 18 ஆக குறைக்க முடியும். இந்த படிவத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று குடும்பத்தின் தலைவர் கையெழுத்து போட வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு ஆவணத்தையும் வழங்குமாறு கோரப்பட மாட்டார்கள்.

ஆனால் படிவத்தை நிரப்புவதற்காக, அவர்கள் வைத்திருக்கும்பட்சத்தில் ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், ஓட்டுனர் உரிம எண் உள்ளிட்டவை கேட்கப்படும்.

இந்தப் பணியில் உள்ளூர் மக்களுடன் அறிமுகமான ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு, அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ஐ செய்து, டிஜிட்டல் முறையில் புதுப்பிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். காகிதத்தில் பதிவு செய்வோருக்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு இடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு தயாரிப்பு பணியை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) உயர்மட்ட கூட்டத்தை நடத்துகிறது.

இந்த கூட்டத்துக்கு உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் தலைமை தாங்குகிறார். உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்கள், மக்கள் தொகை இயக்குனர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் தனது மாநிலம் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com