பட்டாசு கடையில் பயங்கர தீ; 13 பேர் உடல் கருகி சாவு

பெங்களூரு அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
Published on

பெங்களூரு:

பெங்களூரு அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

பட்டாசு கடைகள்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் தமிழக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு, கர்நாடகத்த சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், அங்குள்ள பட்டாசு கடைகளில் ஏராளமான பல்வேறு ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

மேலும் தீபாவளி விற்பனைக்காக லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் வந்து இறங்கின.

பயங்கர வெடி விபத்து

அந்த சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகளை இறக்கி கடையில் அடுக்கி வைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசுகள் அடுத்தடுத்து டமார், டமார் என வெடிக்க தொடங்கின. இதில் தீ மளமளவென அருகில் நின்ற வாகனங்கள் மற்றும் மற்ற பட்டாசு கடைகளுக்கும் பரவியது. அப்போது பட்டாசு கடைக்குள் இருந்தவர்களும் உள்ளே சிக்கி கொண்டனர்.

இந்த வெடி விபத்தை பார்த்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அத்திப்பள்ளி, ஆனேக்கல் மற்றும் தமிழ்நாடு ஓசூர் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் தீயை உடனடியாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும் அந்த இடத்தில் வானுயர தீப்பிளம்பு ஏற்பட்டதுடன், கரும்புகை மூட்டமாகவும் காட்சி அளித்தது.

13 பேர் கருகி சாவு

தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடைக்குள் 20 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 4 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். மீதமுள்ளவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பட்டாசு கடையில் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைக்குள் சென்றனர்.

அப்போது அங்கு 13 பேர் உடல் கருகி இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து 13 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையில் இருந்த 4 பேரின் நிலை குறித்து தீ முழுமையாக அணைந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

15 வாகனங்கள் எரிந்தன

இந்த வெடி விபத்தில் ரூ.2 கோடி பட்டாசுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி, 2 சரக்கு வேன்கள், 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதண்டி, ஆனேக்கல் தாசில்தார் சிவப்பா லமாணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

மேலும் அவர்கள் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரும் தமிழ்நாடு மதுரைய சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். இந்த கோர தீ விபத்தின்போது பட்டாசுகள் வெடித்து சாலையில் சிதறியதால் ஓசூர்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com