ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ - உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் 'சவுதியா ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான SV 3112 விமானம் தரையிறங்கியது. சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில், சுமார் 250 ஹஜ் பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் இந்த விமானம் இன்று லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அதன் இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். தரையில் இருந்தவர்கள் 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.






