ஏர் இந்தியா விமானத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு: உயிர் தப்பிய 181 பயணிகள் - விமானிகள் சஸ்பெண்ட்

தரை இறங்கும்போது ஏர் இந்தியா விமானத்தின் வால்பகுதி தரையில் மோதி அதிக சத்தத்தை எழுப்பியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. 2 முனையத்துடன் செயல்பட்டு வரும் இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த ஏ321 வகை விமானம் நேற்று காலை டெல்லியில் இருந்து 181 பயணிகளுடன் பெங்களூரு புறப்பட்டது.

181 பயணிகள்

இந்த விமானம் சுமார் 3 மணி நேர பயணத்துக்கு பிறகு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க விமானி முயற்சி செய்தார். தரை இறங்கும்போது அந்த விமானத்தின் வால்பகுதி தரையில் மோதி அதிக சத்தத்தை எழுப்பியது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மேலே இயக்கினார். வானில் ஒரு முறை வட்டமடித்த பிறகு அந்த விமானத்தை மீண்டும் பத்திரமாக விமான நிலையத்தில் விமானி தரை இறக்கினார்.

விபத்து காரணமாக அந்த விமானத்தின் வால்பகுதி சேதம் அடைந்தது. விமானம் தரை இறக்கப்பட்டதும் 181 பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதே ஓடுபாதையில் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் காற்றின் அதிவேகத்தால் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது தனது சமநிலையை இழந்ததால், விமானி விமானத்தை மேல்நோக்கி இயக்க முயன்றுள்ளார். அப்போது விமானத்தின் வால்பகுதி ஓடுதளத்தில் மோதியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விபத்துக்குள்ளான விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூருவில் இருந்து மீண்டும் டெல்லி செல்ல இருந்த அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகள் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானிகள் சஸ்பெண்ட்

இந்நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதா? அல்லது விமானியின் தவறால் இது நடந்ததா? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவடையும் வரை 2 விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com