பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு - அதிர்ச்சி சம்பவம்

அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ்.
சண்டிகர்,
அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ். இவர் பிக்பாஸ் ஓடிடி வெற்றியாளரும் ஆவார். பாம்பு விஷத்தை போதைப்பொருளாக பயன்படுத்தி இரவுநேர பார்ட்டி வைத்ததாக எல்விஷ் யாதவ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இவர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், குருகிராமில் உள்ள எல்விஷ் யாதவ் வீட்டில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவின் வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை குறிவைத்து 30 முறை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீட்டின் சுவர், கண்ணாடி சேதமடைந்தன. ஆனாலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லை. அவரது பெற்றோர், வீட்டு பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் எல்விஷ் யாதவ் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. அதேவேளை, துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஹிமான்சு பஹு என்ற ரவுடி கும்பல் பொறுப்பேற்றுள்ளது. எல்விஷ் யாதவ் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது.






