ஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா.. தோஹாவில் இருந்து மும்பை வந்த முதல் விமானம்

ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து விஸ்தாரா விமானங்களுக்கும் AI 2 என தொடங்கும் 4 இலக்க குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
ஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா.. தோஹாவில் இருந்து மும்பை வந்த முதல் விமானம்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது. அதன்பின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் பறக்கத் தொடங்கி உள்ளன.

விஸ்தாரா பெயரிலான கடைசி விமானம் ஒடிசா மாநிலம் மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. அப்போது விமான நிலைய ஊழியர்கள் விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

அதேபோல் ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா விமான நிறுவனம் இணைந்த பின் முதல் விமானம் (AI2286) தோஹாவில் இருந்து நேற்று இரவில் புறப்பட்டு இன்று அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.

இதேபோல், நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டு வந்தது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.

ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து விஸ்தாரா விமானங்களுக்கும் AI 2 என தொடங்கும் 4 இலக்க குறியீடு பயன்படுத்தப்படுகிறது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்திற்கான குறியீடு UK என்று இருந்தது. அது இப்போது AI என மாற்றப்பட்டு, விமானத்தின் எண்களும் 3 இலக்கத்தில் இருந்து 4 இலக்கமாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, UK 955 என்ற விஸ்தாரா விமானம், இனி AI 2955 என்ற குறியீட்டில் இயக்கப்படும். இந்த மாற்றம், பயணிகள் முன்பதிவு செய்யும்போது விமானத்தை எளிதில் அடையாளம் காண உதவும்.

அதே நேரம் விமானங்கள் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விமான எண்கள் மாற்றம் குறித்து, முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com