மணிப்பூர் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி


மணிப்பூர் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி
x
தினத்தந்தி 30 Sep 2024 11:49 PM GMT (Updated: 1 Oct 2024 5:53 AM GMT)

மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அமித்ஷாவுக்கு கார்கே பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசிய கார்கே, அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன். மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை நான் உயிரோடு இருப்பேன். நான் உங்களுக்காக போராடுவேன் என்று ஆவேசமாக பேசினார்.

கார்கேவின் இந்த பேச்சுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமித்ஷா கூறுகையில், கார்கேவின் கருத்து இழிவானதும் வெட்கக்கேடானதுமாகும். கார்கேவின் பேச்சு அவரது வெறுப்பு மற்றும் அச்சத்தை காட்டுகிறது. கார்கேவின் உடல் நலத்தை பொறுத்தவரை, அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழட்டும், 2047-ல் வளர்ந்த பாரதம் உருவாகும் வரை வாழட்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை மந்திரி அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற கழிவுநீர் கால்வாய் மற்றும் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92 சதவீதத்தினர் தலித், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என உங்கள் அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் எந்த வேலையின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் என்பது தெரியவரும் என்பதால், சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜனதா எதிர்க்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதை செய்து முடிப்போம்' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


Next Story