அயோத்தியில் ராமர் கோவில்: அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில்: அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்
Published on

லக்னோ,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 15 நபர் கொண்ட அறக்கட்டளைக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பு 92 வயது மூத்த வழக்கறிஞரான கே.பராசரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் கைலாஷில் உள்ள அவருடைய வீடே அறக்கட்டளைக்கான அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையில் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ், சுவாமி வாசுவேதன், பிரயாக் ராஜ் ஜகத்குரு மாதவ ஆச்சார்யா சுவாமி வில்வ பிரசாந்த தீர்த் , உடுப்பி யோகபுருஷ் பரமானந்தம் சுவாமி கோவிந்தர் உள்ளிட்ட ஆன்மீகத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் சார்பில் விமலேந்தர் மோகனபிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவை சேர்ந்த தலித் பக்தர் கமலேஷ்வர் சவுகான், நிர்மோயி அகரா அமைப்பின் மஹாந்த் தீரேந்திர தாஸ், அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அதன் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் கே. பராசரனின் வீட்டில் இன்று நடந்தது. அதில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, நித்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அறக்கட்டளையின் பொருளாளராக, புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில் கட்டுமானத்துக்கான நன்கொடைகள் பெறுவதற்காக, அயோத்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தனியாக கணக்கு துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com